வியாழன், 22 ஏப்ரல், 2010

வல்லாரை (பிரம்மி)-Vallarai


பிரம்மி என்று அழைக்கப்படும் இத்தாவரம் தரையில் படர்ந்து பரவும். படரும் தண்டிலுள்ள கணுக்களிலிருந்து வேர்கள் புறப்படுகின்றன. இந்தியா முழுவதும் ஈரப்பசை நிறைந்த இடங்களிலும், பெரும்பாலும் ஆறுகள், ஓடைகள் போன்ற நீர்ப்பாசனம் மிகுந்த வயல் வெளிகளிலும் காணப்படுகின்றன. இலைகள் வட்ட வடிவமாக தவளையின் பாதம் போன்ற அமைப்பில் உள்ள கீரை வகையைச் சேர்ந்தது.

இச்செடியின் இலைகளும், தண்டும் மருத்துவ பண்புகள் நிறைந்தவை. வேர்கள் மற்றும் விதைகளிலிருந்தும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இத்தாவரத்திலுள்ள ‘ஆஷாயாடிகோசைடு’ எனும் பொருள் தொழுநோயைக் குணப்படுத்துகிறது. தோல், முடி, நகம் போன்றவற்றின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
ஞாபக சக்தியை வளர்க்கவும், மூளைக்குத் தேவையான சத்து மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் இலைகள் சருகாகவும், பதப்படுத்தப்பட்டும் மருந்துப் பொருள் தயாரிக்கப் பயன்படுகின்றன. வல்லாரை இலையுடன் சிறிது டைமண்ட் கல்கண்டும், குங்குமப்பூவும், பசும்பால் சேர்த்து நன்கு அரைத்து வேளைக்கு நெல்லிக் காயளவு 96 நாட்கள் சாப்பிட்டு வர முகம் ஒளி பெறுவதுடன் இளமை திரும்பும். (உணவில் மாமிசம் தவிர்க்க வேண்டும்).

வல்லாரை இலைகளைப் பற்களின் மிது வைத்துத் தேய்ப்பதனால் பற்களில் படிந்துள்ள மஞ்சள் நிறம் மாறி பற்கள் நல்ல வெண்ணிறத்தைப் பெறும். உணவில் வாரம் ஒரு முறை சேர்த்துக் கொள்வது நலம் பயக்கும்.

நாட்டுப்புற மக்கள் நன்கு அறிந்த மூலிகை வல்லாரை. இது வாய்க்கால் கரை, வரப்பு, வயல் இவ்விடங்களில் தரையோடு தரையாகப் படரும் கொடியினம். கொடியின் கணுக்களில் ஒரு கொத்தாகப் பல தண்டுகள் காணப்படும். தண்டின் நுனியில் வேம்பிலை போன்று ஓரு வட்டமான இலையிருக்கும். இதற்கு சிறு கசப்பு சுவையுண்டு. இதை அளவோடு உண்டால் பெரும் பயனளிக்கும். அளவில் அதிகமானால் தலைவலி, தலைசுற்றல் ஏற்படும். வாக்கு நயமில்லாதவர்கள், ஞாபகசக்தி குறைபாடுள்ளவர்களுக்கு இந்த தெய்வீக மூலிகை ஒரு வரப் பிரசாதம்.

பிணிகளை நீக்கி ஆயுளைப் பெருக்கும். இருதய பலத்துக்கும், உடல் வன்மைக்கும் வல்லாரை ஒரு தெய்வீக கற்பக மூலிகை ஆகும். இதன் இலையை காம்பு இல்லாமல் நிழலில் உலர்த்திப் பொடி செய்து வேளைக்கு மூன்று குன்றி மணி எடை சர்க்கரையுடன் இரண்டு வேளை கொடுக்கலாம்.

இவ்விலையை அரைத்து படை, வீக்கம், யானைக் கால் வீக்கம், ரணம் இவைகட்கு மேல் பூசுவதால் அதிக நன்மை தரும்.

இதில் இலை பெரிதாக உள்ள இனம், இலை சிறிதாகவும் வேர் மிகுதியாக உள்ள இனம் என இருவகை உண்டு. வேர் மிகுந்து இலை சிறியதாக உள்ள இனம் மருத்துவ குணம் அதிகம் பெற்றிருக்கிறது. மலேசியர்களும், சீனர்களும் வல்லாரையை விரும்பி உணவுடன் உட்கொள்கிறார்கள். இதிலுள்ள ஆவியாகும் எண்ணெய் தோல் பகுதியில் செயல்பட்டு நன்கு வேலை செய்கிறது. உடலைத் தேற்றும் பலம் தரும். தோல் வியாதியிலும் பயன் தரும். வீட்டுச் சமையலில் இக் கீரையை வாரம் இருமுறை பயமின்றி உபயோகிக்கலாம்.

வல்லாரையை இடித்தெடுத்துப் பிழிந்த சாறு அரைலிட்டர் நல்லெண்ணெய் அல்லது தே.எண்ணெய் அரைலிட்டர் இரண்டையும் கலந்து அடுப்பில் வைத்து எரிக்க, அடிமண்டி மெழுகு போல விரலால் உருட்டும் போது திரளும் பதத்தில் இறக்கி வடிகட்டி தினந்தோறும் தலையில் தடவியும், தேய்த்துக் குளித்தும் வர, மூளைத்தெளிவு, குளிர்ச்சி தந்து நரையைத் தடுக்கும்.

வல்லாரை இலையை பால் கலந்து அரைத்து, விழுதை நெல்லிக்காய் அளவு உண்டு வர நரை, திரை அகலும். இளமைத் தோற்றம் திரும்பும். எந்த விதமான காய்ச்சலாக இருந்தாலும் வல்லாரை இலையால் செய்யப்பட்ட மாத்திரை குணமாக்கும். இந்த இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் யானைக் கால் நோய் நீங்கும் என்று கூறுவார்கள்.

வல்லாரை இலையை பச்சையாக பயன்படுத்தக் கூடாது. இலைகளை ஆய்ந்து பிட்டுபோல அவித்த பின்னரே பயன்படுத்த வேண்டும். வல்லாரை இலையுடன் அரிசித் திப்பிலி சேர்த்து ஊறவைத்த மைபோல அரைத்து, காலை, மாலை சுண்டைக் காயளவு சாப்பிட்டு வர நல்ல ஞாபசக்தி உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக