
இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். மஞ்சள் ஆண்டுதோறும் வளரும் பூண்டு வகைச்செடி. 60 முதல் 90 செ.மீ. உயரம் வளரும். இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைதது மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்கள்தான் மஞ்சள்.
நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். பச்சை மற்றும் உலர்ந்த கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. மஞ்சளில் இருந்து கிடைக்கும் சத்து எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது.
சுத்திகரிக்கப்பட்ட, பளபளப்பூட்டப் பெற்ற வேர்த்தண்டுதான் மஞ்சள். சமையலில் நிறமும், சுவையும் கூட்டும் மஞ்சள் மருத்துவ குணங்கள் மிகக் கொண்டது. இதில் ‘குர்மின்ங்’ என்ற நிறமி இருக்கிறது. இதில் கரிமஞ்சள், நாக மஞ்சள், காஞ்சிரத்தின மஞ்சள், குரங்கு மஞ்சள், குடமஞ்சள், காட்டு மஞ்சள், பலா மஞ்சள், மர மஞ்சள் என்று பல வகைகள் உள்ளன. ‘ஆலப்புழை மஞ்சள்’ தான் உலகிலேயே மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
துணிகளுக்கு சாயம் ஏற்றவும், மருந்துகளிலும், ஒப்பனைப் பொருட்களிலும் மஞ்சளுக்கு தனி மகிமையே உண்டு. இந்துக்கள் மஞ்சளை மதச் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள்.
பதார்த்தங்களுக்கு நிறம் தருவதற்காக மட்டுமின்றி, மசாலாவில் உள்ள காரத்தால் குடலில் புண் தோன்றாது காக்கவும், பருப்பு வகைகளில் உள்ள வாய்வுகளை அகற்றவும், உதவுவதுடன் காய்கள் நிறமிழக்காமல் தூய்மையடையவும், மீன் மாமிச வகைகளிலுள்ள நச்சுத்தன்மை மற்றும் விரும்பத்தகாத நாற்றங்களைப் போக்கவும் மஞ்சள் பயன்படுகிறது.
இன்றும் பருத்தித் துணிகளுக்கு சாயம் கொடுப்பதற்கும் பூச்சு வண்ணங்கள், வார்னிஷ் முதலியவை தயாரிக்கும் தொழில்களுக்கும் மஞ்சள் பயன்படுகிறது.
மஞ்சள் கலந்த நீரை வீட்டு முற்றங்களிலும், வெளிப்பகுதிகளிலும் தெளித்து வைப்பதன் மூலம் தொற்று நோய்க் கிருமிகள் அணுகவொட்டாமல் செய்யலாம். அளவாக மஞ்சள் பூசிக்கொள்வதால் பெண்களின் முகத்திற்கு வசீகரம் உண்டாகும். சருமம் வறட்சியடைவதில்லை. முதுமைக்குரிய குறிகளைக் தோற்றுவிப்பதில்லை. இரத்தக்கட்டை அகற்றுவதில் மஞ்சளுக்கு ஈடான மருந்து வேறில்லை. மஞ்சளை நல்லெண்ணெயிலிட்டு காய்ச்சி தைலத்தை உடம்பில் தேய்த்துக் குளித்து வந்தால் சரும நோய்கள் தோன்றாது. பெண்களுக்கு ஏற்படும் ‘ஹிஸ்டீரியா’ எனும் நோய்க்கு மஞ்சள்புகை நல்ல மருந்து.
மங்கல உணர்வுடன், மஞ்சளிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம் போன்ற பொருட்கள் நமது இந்துப் பெண்களுக்கு சிக்கனமான நாட்டு ஒப்பனைச் சாதனங்களாகப் பயன்படுகின்றன. உடல் முழுவதும் மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால், சருமம் பொலிவடைகிறது.
மஞ்சளில் உடலின் நிறமியை ஊக்குவிக்கும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகின்றன. பல சரும நோய்களுக்கு பச்சை மஞ்சள் கிழங்குளின் சாறு ஓட்டயிர்க் கொல்லியாகப் பயன்படும். பெரியம்மை நோய்க்கு மஞ்சளை, நல்லெண்ணெய், வேப்பிலையுடன் அரைத்து தடவ வடுக்களை அகற்றி, கிருமிகளை அழித்து, உடலுக்கு வனப்பைக் கொடுக்கும்.
இந்திய மருத்துவத் துறையில் மருத்துவத் தைலங்கள், களிம்புகள் தயாரிப்பிலும் மஞ்சள் முக்கிய இடம் பெற்றுள்ளன. தோலின் அதிகப்படியான எண்ணெய்ப் பசையைப் போக்கக் கூடிய திறன் கொண்டது. புண்களை விரைந்து ஆற்றக்கூடியது.
வீக்கங்களைப் போக்குவதில் மஞ்சளுக்கு அதிக சக்தி உள்ளது. தோல் நோய்கள் அனைத்திற்கும் மருந்தாகிறது. மஞ்சளுக்கு ‘கொலஸ்டிரால்’ அளவினைக் குறைக்கும் திறனும் உண்டு.
பருவ வயதில் தோன்றும் முகப்பருக்களைத் தடுப்பதோடு அவற்றுக்கு சிகிச்சையாகவும் மஞ்சளின் நஞ்சடைத் தன்மைகள் பயன்படுகின்றன. பெண்களின் உடலிலுள்ள வேண்டாத ரோமங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தகிறது.
இது மூன்று அடி வரை தோகையுடன் வளரக் கூடியது. பூமியில் மிருதுவான மணற்பாங்கான இடங்களில் இஞ்சியைப் போன்று பயிராகிறது. வயிற்றில் புண்கள் இருந்தால் அதை ஆற்றும் சக்தி மஞ்சளுக்குண்டு. புண்களில் உள்ள சீழை வெளியேற்றும்.
பித்த வெடிப்பு :
காம்பு நீக்கி சீத்தா இலை 10, 1 முட்டை வெள்ளைக்கரு, 1 அங்குல பச்சை மஞ்சள் மூன்றையும் கலந்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும். இரவில் படுக்கைக்குப் போகுமுன் கால்களை சுத்தமாக்கி பின் இக்களிம்பை தடவி வெள்ளை துணியால் சுற்றிக் கொண்டு உறங்க வேண்டும். காலையில் வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு பாதங்களைக் கழுவி, ஈரம் போகத் துடைக்க வேண்டும். தொடர்ந்து 4 நாட்கள் செய்ய பித்த வெடிப்பு குணமாகும்.
ஆழமற்ற வடுக்கள் என்றால் மஞ்சள்பொடி, திருநீறு இரண்டையும் சமஅளவு எடுத்துக் கலந்து வைத்துக் கொண்டு பவுடர் போல் பாதிக்கப்பட்ட இடங்களில் பூசினால் குணமாகும்.
மஞ்சளைச் சாதத்துடன் சேர்த்தரைத்துக் கட்டிகளின் மீது வைத்துக்கட்ட அவைகள் எளிதில் பழுத்துடையும். மஞ்சளைக் சுட்டு முகர நீரேற்றம் நீங்கும். மஞ்சளுடன் ஆடாதோடா பாலை இலை சேர்த்து பசுவின் நீரை விட்டரைத்துப் பூச சொறி, சிரங்கு, நமைப்படைகள் ஒழியும். மஞ்சள் நீரை அருந்த காமாலை போகும். மஞ்சளை அரைத்து நீரிற்கலக்கி, வெண்சீலைக்குச் சாயமேற்றி அவ்வாடையை உடுப்பதால் வாதநீர்ச்சுருக்கு, இருமல், ஜுரம், மலக்கட்டு இவை நிங்கும்.
மஞ்சள் நீரில் நனைத்த துணியினை நிழலிலுர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள் கண்களை அப்போதைக்கப்போது துடைத்துவர கண் சிவப்பு, கண்ணருகல், கண்ணில் நீர் கோர்த்தல் போன்றவை தணியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக