
உச்சி முதல் உள்ளங்கால் வரை ஏற்படும் உடல் பிணிகள் பலவற்றை குணப்படுத்தும் இக்காய் பக்க விளைவுகள் ஏற்படுத்தாது. திரிபலாத் தைலமாக தலையின் பொடுகு, நரையைக் குணப்படுத்தும் கொண்டது.
கடுக்காய் மலைகளில் தான் பயிராகும். கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக் கடுக்காய், பால் கடுக்காய் எனும் நான்கு வகையினுள் கருங்கடுக்காய் மலத்தைப் போக்குவதுடன் மேனிக்கு அழகைக் கூட்டும். அறிவுத் தெளிவை ஏற்படுத்தும். வாத, பித்த கபத்தை நீக்கும். செங்கடுக்காய் நீர் முப்பிண நோய்களை போக்கவல்லது. மேனி பொன்னிறம் பெறவும், அறிவு பெருக்கவும் உதவுகிறது. வரிக்கடுக்காய் விந்துவைப் பெருக்கி உடலுக்கு பொலிவு தரும். பால் கடுக்காய் உடலுக்கு அழகும், ஒளியும் வன்மையும் தரும். வயிற்று மந்தத்தைப் போக்கும்.
மரம் 100 அடி உயரம் வரை வளரக்கூடியது. இந்தியக் காடுகளில் ஆங்காங்கு வளர்கிறது. அறுசுவைகளுள் உப்பு சுவை நீங்கலாக உள்ள மற்ற ஐந்து சுவைகள் உள்ள ஒரே கனி கடுக்காய் ஆகும். ‘பெற்ற தாயினும் சிறந்தது’ என சித்தர் பாடுகிறார். தாய் அறுசுவை உணவு ஊட்டி உடல் வளர்ப்பது போல் கடுக்காய் அறுசுவை கனி கொடுத்து நோயை நீக்கி நம் உடலைத் தேற்றுமாம்.
நாட்டு கடுக்காயில் முற்றிப் பழுத்தது, பசுமை நிறத்தோடும், சதைப்பற்று உள்ளதாகவுமிருக்கும். அவ்வாறு இல்லையேல் கரு நிறத்தோடு சதைப்பற்று அற்றதாக இருக்கும் காபூல் கடுக்காய் பார்வைக்குப் பெரிதாகத் தோன்றினாலும் ஊட்டமில்லாமல் இருக்கும். சூரத் கடுக்காய் மஞ்சள் நிறத்தோடு ஊட்டம் மற்றம் எடையோடு இருக்கும்.
கடுக்காய்த் துவையல் அரோசகத்தைப் போக்கும். மலத்தைக் கட்டும். கடுக்காயும், காசுக்கட்டியும் சமபாகமெடுத்து அரைத்து நாக்கு விரணத்துக்குத் தடவ நன்மை தரும். கடுக்காயின் நுண்ணிய பொடியையேனும், கஷாயத்தையேனும் மூலத்தின் மீது தூவ அல்லது கழுவ இரத்தம் நிற்கும். ஒவ்வொரு நாளும் காலைதோறும் கடுக்காயை ஓராண்டு சாப்பிட்டு வர நரை, திரை மாறும். பச்சைக் கடுக்காயை பாலிலரைத்துச் சாப்பிட இருமல், சீதக்கடுப்பு, புகையிருமல், நீங்கும்.
கடுக்காய்க்கு ‘பிள்ளை வளர்த்தி’ என்று பெயர். சுண்ணாம்பில் கடுக்காயை ஊறவைத்து அந்நீர் கலந்து கட்டிய கட்டடங்கள், பலமானவையாக இன்றும் விளங்குகின்றன. விலையோ குறைவு, பயனோ மிகுதி. திரிபாலதித் தைலமாகத் தலையின் பொடுகு, சுண்டு நரை, கண் சிவப்பைக் குணப்படுத்தும். கடுக்காயத் தோலைச் சந்தனக் கல்லில் உரைத்து எடுத்த விழுதை காலில் பித்தவெடிப்பு, ஆறாத சேற்றுப் புண்களுக்குத் தடவ உடனடி ஆறுதலும், குணமும் தரும். பாக்டிரியா கிருமிகளை மட்டுமல்ல நுண் கிருமிகளையும் கொன்றொழிக்கும் கடுக்காய், உடல் தேற்றும் பண்பு படைத்தது. கொடிய குணம் சிறிதும் இதற்குக் கிடையாது. துவர்ப்புக் குணமும், உடல் தேற்றும் தன்மையும், மலமிளக்கும் இயல்பும், கிருமி கொல்லும் ஆற்றலும் குழந்தைகளின் குடல் கோளாறுகளைப் போக்கும் திறனும் கொண்டது.
கடுக்காய்க்கு அமிர்தம் என்று பெயர் வழங்குகிறது. கடுக்காயை லேகியம் செய்து உண்ண, நரை, திரை மாறி காய சித்தியாகும்.
இதற்கு ‘அகஸ்த்தியர் ரசாயனம்” என்று பெயர்.
கடுக்காய்த் தோலை மட்டுமே உபயோகிக்க வேண்டும். தோலை சந்தனக் கல்லில் உரைத்து, விழுதைக் காலில் பித்தவெடிப்பு, சேற்றுப் புண் மற்றும் ஆறாத புண்களுக்குத் தடவி உடனடி குணம் பெறலாம். பல்வலி தீர்க்க பற்பசை தயாரிப்பில் சேர்க்கப்படுகிறது.
உப்புச் சுவை தவிர இதர சுவைகள் அனைத்தும் பெற்றது கடுக்காய். கடுக்காயை உப்புடன் சேர்த்து உண்டால் ஐயமும், வெல்லத்துடன் சேர்த்து உண்டால் முன்குற்றமும் நீங்கும். எனினும் செரிப்புத் தன்மை அற்றவர், இல்லறத்தில் ஈடுபட்டோர், பட்டினி கிடந்தோர், கருவுற்றோர், தொண்டையிறுகல் உள்ளோர் பயன்படுத்துதல் ஆகாது. கடுக்காய் பொடி பல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும். பல் இறுகும். பாலுடன் காய்ச்சி கொடுக்க சீதபேதி நிற்கும். நாள்தோறும் காலையில் கடுக்காய் சாப்பிட்டு வந்தால் நரைமுடி இருக்காது. மேனியில் சுருக்கம் விழாது.
கொதிக்க வைத்த கடுக்காய் தண்ணீரில் ஆசனத்திலுள்ள மூலத்தை கழுவி வந்தால் வெளி மூலம் சுருங்கி குணம் அடையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக