வியாழன், 22 ஏப்ரல், 2010

சந்தனம் -Sandalwood tree


மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம். இதன் தாயகம் இந்தியா. இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படும். சுமாரான உயரத்துடன் கூடிய மரம். வளர்ந்த மரம் வாசனை நிரம்பியது. மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவை. சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியவை.

மரத்தின் வைரம் பாய்ந்த நடுப்பகுதியும், வேர்களும் மிகுந்த மணம் கொண்டவையாகும். கட்டையை பழச்சாற்றில் உரைத்து சொறி, சிரங்கு, தேமல் போன்ற தோல் வியாதிகளுக்கு பூசலாம். புருவத்தின் வலிகளுக்கு உரைத்துப் பற்றிடலாம். சந்தனாதித் தைலம் தேய்த்து தலைமூழ்கி வர உடல் சூடு தணிந்து முறைப்படும்.

சந்தன மரம் 12 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. பருமனுக்கு ஏற்ப மிக விலை உயர்ந்தது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மரத்தின் மையம் பகுதியிலும், வேர்ப்பகுதியிலும் சேகரித்து வைத்துக் கொள்ளப்படுகிறது. சந்தன மரம் உலக விளைச்சலில் 65 சதவீதம் இந்தியாவில், குறிப்பாக கர்நாடகாவில் விளைகிறது.

சந்தனம் தமிழர் வாழ்வில், மருந்தில் மிக முன்காலத்திலிருந்து பயன்பட்டு வந்துள்ளன. வெளி உபயோகத்தில் மட்டுமல்ல உள் மருந்தாக உண்பதாலும் பல பிணிகள் நீங்கும்.

மிகுந்த நறுமணத்துடன் நீடிக்கவல்ல தன்மையுடன் இருப்பதால் மணமுள்ள பொடிகள் தயாரிக்கவும், ஒப்பனைச் சாதனங்களில் சேர்க்கப்படும் வாசனைப் பொருளாகவும், பூச்சிக் கொல்லிகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

ஒளிக்கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகளைத் தடுக்கிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் களிம்புகள் அனைத்து வித சருமத்திற்கும் ஏற்றது.

சருமத்திற்கு மிருதுத் தன்மை அளிக்கக்கூடியது. காய்ச்சலையும், ஒற்றைத் தலைவலியையும் போக்கும் குணமும் உண்டு. சந்தனமரம் தனித்து வளராது. வேறு மரத்திற்கு அருகில்தான் வளரும். மற்ற மரத்தின் வேரிலிருந்து தனக்கு வேண்டிய ஊட்டச் சத்துகளைப் பெற்றுக் கொள்கிறது.

பக்கவாதம், முடக்குவாதம், அஜீரணம் எனப் பல நோய்களைப் போக்கும். மேல் பூச்சாக தோல் வியாதிகளைப் போக்கும். தளர்ந்த சருமத்திற்கு இறுக்கமளிக்கும். பாலுணர்வை ஊக்குவிக்கும் செயல் ஊக்குவியாகவும் செயல்படுகிறது. உலர்ந்த மரக்கட்டைகள் பொடியாக்கப்பட்டு நீருடன் சேர்த்து கொப்புளங்களுக்கு களிம்பாகவும், தோல் வியாதிகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயும் தோல் வியாதிக்கு பயன்படுகிறது.

தலையில் அரைத்துப் பூச சுரத் தலைவலி, கோடைக்கட்டிகள் அதன் தழும்புகள் குணமாகும். மூளைக்கும், இருதயத்திற்கும் உள்ள பலவீனம் நலமடையும்.

சந்தனம் இரத்தத்தை சுத்தி செய்து, தேகத்தைக் குளிர்பித்து, மார்புத் துடிப்பு, மனபயம் முதலியவற்றை குணப்படுத்தும். சந்தனக் கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றுடன் அரைத்துக் தடவ நமைச்சல், சொறி சிரங்கு, அக்கி, படர்தாமரை, வீக்கம், தேமல் சரியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக