வியாழன், 22 ஏப்ரல், 2010

எலுமிச்சை-Lemon


வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரும் முட்கள் கொண்ட புதர்ச்செடி அல்லது சிறிய பரந்த மரம். கனிகள் நல்ல மஞ்சள் வண்ணமும், நறுமணமும் கொண்டவை. பூக்களும், கனிகளும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. கனிகளில் சிட்ரிக் அமிலம் மிக முக்கியப் பொருளாகக் காணப்படுகிறது. இவை கிருமிகளுக்கு எதிரானவை.எலுமிச்சம் பழத்தின் தோல், சாறு, விதை எல்லாமே பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் சி, ஏ, பி, சுண்ணாம்புச் சத்து, உலோகச் சத்து, சர்க்கரை, பாஸ்பரஸ், சிட்ரிக் அமிலம், மாலிக் அமிலம், புரோட்டீன், உப்பு, கொழுப்பு முதலியன அடங்கியுள்ளன.

வைட்டமின் ‘சி’ சத்து அதிகம் இருப்பதால் சருமம் மற்றும் தலை கழுவியாகவும், சிறந்த சரும டானிக்காகவும் பயன்படுகின்றது. சருமத்திலுள்ள கறைகளை அகற்றுகிறது. சிட்ரிக் அமிலம் எடுக்கப்படுகிறது.

பசியைத் தூண்டல், ஜீரண உறுப்புகளை ஊக்குவித்தல், தசை இறுக்குதல், வயிற்றுவலி மற்றும் வாந்தியை நிறுத்துதல் போன்றவற்றுக்கு மருந்தாகிறது. மேலும் கனியின் சாறு தாகத்தினைப் போக்கி, உடல் எரிச்சலையும் போக்கி, உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கவல்லது.

இயற்கையாகவே சருமத்திற்கு ஊறு விளைவிக்காமல் சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. முகத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை அகற்றும் வேதிப் பொருட்கள் இருப்பதால் முகத்திற்குத் தேவையான களிம்புகள், மாஸ்க்குகள், கிரீம்கள், குளியல் சோப்புகள், ஷாம்புகள் என அனைத்திலும் இப்பழத்தின் ஆதிக்கம் அதிகம்.

விதைகள் மற்றும் தோலிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. எலுமிச்சை சாதாரணமாக இரண்டரை முதல் மூன்று ஆண்டுகளில் பலன் தர ஆரம்பிக்கும். நல்ல நீர் வளமும், நில வளமுமுள்ள இடத்தில் 50 ஆண்டுகள் வரை பூத்துக் காய்த்துக் கனிந்து பலன் தந்து கொண்டே இருக்கும். சில மரங்கள் நூறு ஆண்டுகள் வரை கூட பலன் தந்து கொண்டிருக்கும்.

எலுமிச்சைசாறு நேரடியாக பற்களின் மீது அடிக்கடி பட நேர்ந்தால் பற்களின் மேல் மின்னுகிற எனாமல் சிதைந்து கெட்டுவிடும். ஆகவே எந்த நிலையிலும் எலுமிச்சைசாறை தனியாக அருந்தவே கூடாது. தனியாக அருந்தும் போது தொண்டையும், மார்பும் வெகுவாகப் பாதிக்கப்படும். தேன் கலந்து பழரசங்களுடன் சேர்த்தே உட்கொள்ளலாம்.

உடலுக்கு வேண்டிய உயிரூட்டத்தையும், ஒளியையும், அழகினையும் எலுமிச்சை மூலம் எளிதில் பெறலாம்.

எலுமிச்சை சாறுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை, கண் நோய், ஆரம்ப யானைக்கால் நோய் குணப்படும். எலுமிச்சை தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவு பொரித்த படிகாரம் சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு, உடலில் ஏற்படும் தேமலுக்கு சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து இரவு நேரத்தில் பூசிக் காலையில் குளித்துவர தேமல் மறையும்.

பன்னீர், எலுமிச்சை சாறு சம அளவு நீர்விட்டுக் குலுக்கி வாய் கொப்பளித்து வர வாய் துர்நாற்றம் நீங்கும். வாரந்தோறும் எலுமிச்சை சாறை தலையில் தேய்த்துக் குளித்துவர பொடுகு அகலும்.

நெல்லிக் கனிகள் - சிலவற்றை நன்கு அரைத்து எலுமிச்சை ரசம் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடிகொட்டுவது நின்றுவிடும். முடி செழித்து வளர்ந்து கருநிறமாகவும் இருக்கும்.

ஆலமரத்தின் விழுதை அரைத்து எலுமிச்சை சாறுகளோடு கலந்து வாரந்தோறும் தலையில் இட்டுக் குளித்து வர தலைமுடி நன்றாக வளரும். வெள்ளைப்பூண்டை எலுமிச்சை சாற்றோடு கலந்து தேய்த்து வந்தால் பேன் தொல்லை நீங்கும். தலை சூடு தணிய பச்சை பயறு மாவோடு எலுமிச்சை கலந்து குளித்தல் நலம் பயக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக