வியாழன், 22 ஏப்ரல், 2010

அழகிற்கு அணிசேர்க்கும் மூலிகைகள் -Karisalankanni


கரிசாலை என்று அழைக்கப்படும் கரிசலாங்கண்ணி இந்தியாவின் வெப்பமான பகுதிகளில் எளிதாக வளரும். இதை கரிசாலை, கையான், கரப்பான் என்பர். புதர்கள், சாலையோரங்கள், சதுப்பு நிலங்கள் என எங்கும் காணப்படும் சிறுசெடி.

கரிசலாங்கண்ணி நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை என நான்கு வகைகளுண்டு. மஞ்சள் கரிசாலை சாதாரண கரிசாலையைவிட மிக உயர்ந்தது. வடநூல்கள் இது ஒரு கற்பக மூலிகை என்கின்றன. இதை இடித்துச் சாறு பிழிந்தால் கறுப்பாக இருக்கும். காரணம் இதில் இரும்பு சத்தும் செம்புச் சத்தும் அதிகமுள்ளது.

முழுத் தாவரமும் மருத்துவ பண்பு உடையவை. தோல் நோய்கள் மற்றும் மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும். கல்லீரல் நச்சுத் தன்மையை நீக்கும். கூந்தல் வளர்ச்சிக்கு உறுதுணை புரிவதால் கேசத் தைலமாக பயன்படுத்தப்படுகிறது. கேசத்திற்கு சாயமிடுவதிலும் பயன்படுகிறது. பற்று, தேள் கடிக்கு மருந்தாகும். வீக்கங்கைக் குறைக்கும்.

உடலுக்கு பொன் வடிவத்தையும், வலிமையையும் அளிக்கக் கூடியது. இலைகளை அரைத்த விழுதை உடலில் தேய்த்துக் குளிக்க, நாளடைவில் தோல் பொன்னிறமாக மாறும்.

மஞ்சள் கரிசாலையைக் கறியாகச் செய்துண்ண அறிவின் தெளிவும், திருவும் சேரும். இலைச்சாறு 90 துளி எடுத்து அதோடு நீர் அல்லது மோர் சேர்த்துக் சாப்பிட பாம்பின் கடி நஞ்சு போகும். இரண்டு துளி எடுத்து எட்டு துளி தேன் கலந்து கொடுக்க கைக் குழந்தைகட்கு ஜலதோஷம் நீங்கும்.

தினமும் காலையில் கரிசலாங்கண்ணியின் வேரால் பல் துலக்கி, பின் இக்கீரையை 2 பிடி எடுத்து மென்று, தின்று ஒரு டம்ளர் நீர் அருந்தி வர, நாளடைவில் பற்களில் படிந்துள்ள மஞ்சள் நிறக் கறை அகன்றி விடும்.

உடலில் சப்த தாதுக்களை உரமாக்கி, வலுவைத் தந்து உயிர் அணுக்களைப் பெருக்கித் தங்க நிறம் போன்ற சருமத்தை உண்டாக்கும் குணமுடையது. கரிசலாங்கண்ணி இலையை மைபோல அரைத்து உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் உடல் பொன்னிறமாக மாறும். நரை, திரை மாற்றக்கூடிய 108 கற்பக மூலிகைகளில் கரிசாலை முக்கியமானது.

கரிசாலை சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து தீயில் காய்ச்சி சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் தலைக்கு தடவி வர முடி கறுத்து, செழித்து வளரும்.

கரிசலாங்கண்ணி 300 கிராமுடன், கொட்டைக்கரந்தி இலை சமபங்கு சேர்த்து ஏழு நாள் நிழலில் உலர்த்தி எட்டாம் நாள் பொடித்து, சலித்து வைத்து காலை, மாலை அரைத் தேக்கரண்டி தூளுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக் குழப்பி நாற்பது நாள் சாப்பிட்டு வர நரை மயிர் தானே கருத்து வரும். அவ்வளவும் கருநிறமாக மாறிவிடும். இந்த இலையை நன்றாகக் கசக்கி தேள் கொட்டிய இடத்தில் வைத்து துணியில் ஒரு பொய்க்கட்டு போட்டு விட்டால் போதும். விஷம் இறங்கிவிடும். உலர வைத்த கரிசலாங்கண்ணி பொடியை பசும் பாலுடன் ஒரு மண்டலம் உண்டு வர பல நோய்கள் தீருவதோடு பெண் பூப்படைவாள்.

வெள்ளை கரிசலாங்கண்ணி என்ற சிறிய செடி சோகை நோய்க்கு ஒரு வரப் பிரசாதம். கரிசாலை இலைகள் 200 கிராம், மிளகு 10 கிராம் இரண்டையும் அரைத்து சுண்டைக்காயளவு உருட்டி நிழலில் மூன்ற நாள் உலர்த்தி பின் ஒரு கோப்பையில் போட்டு மூழ்க தேன் விட்டு ஐந்து நாட்கள் வெயிலில் வைத்தெடுத்து வாயகன்ற பாட்டிலில் பத்திரப்படுத்தி தினமும் காலை, இரவு உணவுக்கு முன் பதினைந்து வயதுக்குட்பட்டவர்கள் வேளைக்கு ஒரு தேக்கரண்டியும், பெரியவர்கள் இரண்டு தேக்கரண்டி என மென்று தேவை கையிலிட்டு நக்கி சாப்பிட, மஞ்சள்காமாலை சோகை நீங்கி, இரத்த விருத்தி ஏற்படும். நீண்ட நாட்கள் உண்டு வர கண்கள் பிரகாசமடையும். தலைமுடி கருக்கும். (தேனை உறிஞ்சிக் குடிக்கக் கூடாது. ஏனெனில் புரை ஏறி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்). இலைச் சாற்றை காது வலிக்குக் காதுகளில் விடலாம். இதனை நல்லெண்ணெயில் அரைத்து யானைக்கால் நோய்க்கு மேலுக்குப் பூசலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக