வியாழன், 22 ஏப்ரல், 2010

பார்ஸ்லி -Parsley


மத்தியத் தரைக் கடல் பகுதி மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் மிகுதியாகப் பயிரிடப்படுகிறது. எனினும் இலைகளுக்காக இந்தியாவில் வேளாண்மைத் துறையில் பயிரிடப்படுகிறது. இது குளிர்காலப்பயிர் என்பதால் மலைப்பிரதேசங்களில் செழித்து வளருகிறது.

செடியின் எல்லா பகுதிகளிலும் ‘பார்ஸ்லி எண்ணெய்’ என்ற சத்து எண்ணெய் கிடைக்கிறது. பார்ஸ்லியின் பச்சை இலைகள் உணவுப் பண்டங்களின் வாடையைக் குறைக்கப் பயன்படுகிறது. இலைகள் பச்சையாகவும், இலையமுதாகவும் உட்கொள்ளப் படுகின்றன. இறைச்சி, கோழி இறைச்சி சமையலில் வாசனைக்காகவும் ருசிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை தேனீர் பானம், சொறி, சிரங்குகளைத் தடுக்கும் குணம் கொண்டது. வைட்டமின் ‘சி’ அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். பழத்தின் தோல், பேன் போன்ற சருமப் பூச்சிகளை ஒழிக்க உதவும். பார்ஸ்லியை அளவோடு உபயோகித்தால் நலம் பயக்கும்.

சடாமஞ்சி

சீமை இனம், நாட்டு இனம் என இருவகை உண்டு. சீமை இனம் வட ஆசியா, வட காஷ்மீரம், சிந்து, பர்மா, இலங்கை முதலிய இடங்களிலும் நாட்டு இனம் இமயம், காஷ்மீர், பூட்டான் முதலிய பாகங்களிலும் பயிராகிறது. இது ஒருவகைப் பூங்கோரை இனம். இதற்கு நீண்ட ஆணிவேரும், பல சல்லி வேர்களுமுண்டு. புதிய வேருக்கு இனிப்பும், அதிக காரமான மணமுமிருக்கும். நாட்சென்றால் நாற்றம் பெறும். இவ்விரண்டு இனத்திற்கும் குணம் சற்றேறக்குறைய ஒத்திருக்குமென்பது கொள்கை.

சீமை இனத்தைப் பொடிசெய்து பத்திலிருந்து இருபது குன்றுமணி எடை நீரிற் கலந்து, நாள் ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை கொடுக்க சுரம், வலிப்பு நீங்கும். முக்கால் வராகன் எடை கொடுக்க கோழையை வெளிப்படுத்தும்.

நாட்டு இனத்துச் சடாமஞ்சியை நசுக்கி எடுக்கப்படும் எண்ணெய் அரோமா எண்ணெய் எனப்படுகிறது. இது மஞ்சள் நிறமாயிருக்கும். இது தலைமயிர் கறுத்து வளர உதவும். மேலும் சரும நோய்களுக்கும், கிரீம்களுக்கும் சேர்க்கப்படுகிறது.

சடாமஞ்சியை நசுக்கி வெந்நீரில் ஒருமணி நேரம் ஊறவைத்து வடிகட்டி, அரைக்கால் முதல் கால் ஆழாக்கு வீதம் தினம் மும்முறை கொடுக்க சூதக சன்னி, வலிப்பு நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக