
இந்தியாவிலும் பலுசிஸ்தானத்திலும் பயிராகும் சிறு செடி. கீழ் வங்காளத்தில் கிடைப்பதில்லை. இச்செடி சாம்பல் நிறமுள்ளது. காய் தக்காளிக் காயைப்போலத் தோலால் மூடப்பட்டு உள்ளே காயிருக்கும். பழுத்தால் பழம் செந்நிறமாயிருக்கும்.
இது நம்நாட்டு ஜின்சங். கிராமங்களில் சிறிய புதர்க்காடுகளில் வளரக் கூடிய கத்தரி இனத்தைச் சேர்ந்த செடி இனமாகும். அமுக்கணாங் கிழங்கு என்றும் கூறுவர். அமுக்கரா செடியின் சதைப் பற்றுள்ள வேர் அமுக்கிராங்கிழங்கு எனப்படுவதாகும். ஆயுர்வேதத்தில் இது அஸ்வகந்தி எனப்படுகிறது.
சீனா, கொரியாவில் பிரசித்தி பெற்ற ஜின்செங் என்ற செடியின் வேருக்கு சமமான பலன் இதில் உண்டு. வெப்ப குணமுள்ள அமுக்கரா வேரைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பாத்திரத்திலிட்டு மூழ்க பசும்பால்விட்டு வேகவைத்து பால் சுண்டின பின் அளவிட்டு நீரில் அலம்பி வெயிலில் காய வைத்து பத்திரப்படுத்த வேண்டும். சிறிது துவர்ப்புள்ள இக்கிழங்கினால் சகலதோஷம் நீங்கும்.
அமுக்கிராங் கிழங்கினால் கஷாயம், வாதநோய், தோல் நோய், வயோதிக பலஹீனம் போகும். கிராம மக்களிடையே இப் பச்சைக்கிழங்கை அம்மியிலரைத்து காரக்குழம்பில் கலந்து சமைத்துண்ணும் பழக்கம் நடைமுறையிலுள்ளது. பச்சை அமுக்கிராங்கிழங்கை அரைத்துக் கட்டி, அடிபட்ட வீக்கம், வாத வீக்கங்களின் மேல் பூசி வைக்க வீக்கம் வற்றி விடும்.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நீர்முள்ளி விதையைச் சுத்தம் செய்து 100 கிராம் எடுத்து சம அளவு சுத்தி செய்த அமுக்கிராங் கிழங்குகளோடு சேர்த்து நன்கு இடித்து தூளாக்கி சலித்து சமஅளவு கலந்து வைத்துக் கொள்ளவும். காலை, இரவு, உணவுக்குப்பின் 1 ஸ்பூன் வீதம் காய்ச்சிய பசும்பாலில் கலந்து சாப்பிட்டுவர, கை, கால் ஓய்ச்சல், நரம்புத்தளர்ச்சி நீங்குவதுடன் உடல் உறுதி, காமவிருத்தி, நீண்ட ஆயுள் ஏற்படும். பத்தியமில்லை.
அமுக்கிராங் கிழங்கை பொடி, நெய் முதலியன செய்து பயன்படுத்தினால் உறுதி, அழகு, நீண்ட ஆயுள் முதலியவைகள் உண்டாகும். இதைச் சுக்குடன் சேர்த்து வெந்நீர் விட்டரைத்து, வீக்கங்களுக்குப் போட வீக்கம் கரையும். கிழங்கு அல்லது இலையை அரைத்து நோயுடன் கூடிய வீக்கம், புண் இவைகட்குப் பூசலாம்.
கிழங்கைப் பாலில் வேகவைத்து அலம்பி, உலர்த்தி பொடிசெய்து ஒருவேளைக்கு இரண்டு முதல் நான்கு கிராம் வரை தேனில் கலந்து கொடுக்க பசியின்மை, உடல் பருமன் இவைகள் போகும்.
அமுக்கிராக்கிழங்குப் பொடி ஒரு பங்கும், கற்கண்டு மூன்று பங்கும் சேர்த்து வேளைக்கு நான்கு கிராம், காலை, மாலை உட்கொண்டு அரை அல்லது ஓர் ஆழாக்கு பசுவின்பால் சாப்பிட்டுவர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். உடல் வன்மை பெறும். உடலுக்கு அழகு தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக