வியாழன், 22 ஏப்ரல், 2010

அகில்-Agile


அகில் சந்தன மர வகையைச் சார்ந்தது. அகில் கட்டை இலேசான இனிப்பும், கசப்பும் கலந்த சுவை உடையது. உடலின் எந்தப் பகுதியில் வீக்கம் இருந்தாலும் அதைக் குறைக்கும் ஆற்றல் பெற்றது. சுமார் 60 முதல் 75 அடி வரையிலும் வளரக் கூடிய மரம். இம்மரங்களில் ஒருவித பிசின் இருக்கிறது. அதுவே அகில் எனப்படுகிறது.

இந்தியாவில் அஸ்ஸாம் காடுகளிலும், கம்போடியா, பர்மாவிலும் அதிகம் காணப்படுகிறது. மருத்துவ முறைப்படி பக்குவம் செய்து சாப்பிட நரை, திரை போன்ற முதுமைக்கால சருமக் குறைபாடுகளை அகற்றி சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.

அகில் கட்டையை பசும்பால் விட்டு சந்தனம் அரைப்பது போல் அரைத்து, விழுதை சருமத்திற்கு தொடர்ந்து பூசி வர, சருமத்திலுள்ள சுருக்கங்கள் நீங்கும்.

ஊளைச் சதை உள்ளவர்கள் இந்த விழுதை தொடர்ந்து உடலில் பூசி வர ஊளைச் சதைக் குறைந்து இறுகி, உடல் வனப்புடன் விளங்கும் என மருத்துவக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன.

சந்தனம் போன்று நறுமணம் கொண்டது. பண்டைக் காலங்களில் அகிற்புகையூட்டி கூந்தலை உலர்த்தியிருக்கிறார்கள். இதிலிருந்து வடிக்கப்படும் தைலம் “அகர் அக்தர்” எனப்படுகிறது. இது தனியாகவும், பல உயர்ந்த வாசனைப் பொருள் தயாரிப்பில் கூட்டுப் பொருளாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்திய மருத்துவம், ஆயுர்வேத, சித்த மருத்துவங்களிலும் சிறப்பிடம் பெறுகிறது.

வெப்பத்தைத் தூண்டும், பித்தத்தைப் பெருக்கும், வீக்கங்களை வடிக்கும் செய்கையுடையது. வயோதிகத்தால் உண்டாகும் தேகத் தளர்ச்சியைப் போக்கி உடம்பை இறுக்கும். சந்தனம் போல அகிற்கட்டையை உரைத்து மேனியில் பூசிவர, வயோதிக மேனித் தளர்ச்சி நீங்கும். ஆண்மை விருத்தியில் அகிற்கட்டையும் பங்கு கொள்ளும்.

அகிற்கட்டை தைலம் வடித்து தலைக்கு உபயோகித்து வர மூக்கடைப்பு, பீனிசம் போன்ற நோய்கள் அணுகாது.

அகிற்தைலம் :
அகிற் ஊறவைத்த நீர், நல்லெண்ணெய், பசும்பால் வகைக்கு ஒரு படி எடுத்து ஒன்று கூட்டி, இதில் அதிமதுரம், தான்றிக்காய்த் தோல் சிறிது எடுத்து பசுவின் பால் விட்டரைத்துக் கலந்து, எரித்துப் பதத்தில் வடித்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

இத்தைலத்தை தினசரி தலைக்குத் தடவிவர நீர்க்கோவை, மேகம், மூக்கடைப்பு முதலிய நோய்கள் தீரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக